வளர்ந்த பாரத இளம் தலைவர்கள் கலந்துரையாடல் – திருச்சி இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
திருச்சி, செப். 9 வளர்ந்த பாரத இளம் தலைவர்கள் கலந்துரையாடல் – திருச்சி இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
விக்சித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக்–2027 எனப்படும் வளர்ந்த பாரத இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி, 2027 ஜனவரி 12-ஆம் தேதி புதுடெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னோட்டமாக திருச்சியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
மை பாரத் கேந்திரா திருச்சி மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா இதுகுறித்து கூறுகையில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து இளைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றார்.
முதல் கட்டமாக மை பாரத் இணையதளத்தில் நடைபெறும் வினாடி வினா போட்டியில் பங்கேற்க வேண்டும். இந்த வினாடி வினா ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அடுத்த கட்டமாக ஆன்லைன் கட்டுரைப் போட்டியில் பங்கேற்பார்கள். தொடர்ந்து மாவட்ட அளவிலான பேப்பர் பிரசன்டேஷன், மாநில அளவிலான தேர்வு என பல்வேறு கட்டங்களை கடந்து தேசிய அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, வளர்ந்த பாரதம் தொடர்பான தங்களது கருத்துகள் மற்றும் புதிய யோசனைகளை பாரத பிரதமரிடம் எடுத்துரைக்கும் வாய்ப்பை பெறலாம் என்றார்.
மேலும், மை பாரத் தளத்தில் ஏற்கனவே பதிவு செய்து பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்று வரும் இளைஞர்களின் முந்தைய செயல்பாடுகளும் தேர்வு நடைமுறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. வினாடி வினாவில் 20 கேள்விகள் இடம்பெறும் என்றும், அதிகமானோர் சரியான பதில்களை அளிக்கும் நிலையில், மை பாரத் தலைமையகத்தின் நடைமுறைகளின்படி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 15 முதல் 29 வயதுடைய அனைத்து இளைஞர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மை பாரத் தளத்தில் பதிவு செய்து வினாடி வினாவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா கேட்டுக்கொண்டார்.