துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம்
திருச்சி, செப். 10 துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
துறையூர் அருகே உள்ள கீழ நடுவலூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கீழ நடுவலூர் கிராமத்தில் உள்ள கிழக்கு தெரு மற்றும் தெற்கு தெரு பகுதிகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணக்குமார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விரைவில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதை அடுத்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதோபோல் உப்பிலியபுரம் ஒன்றியம் ஒக்கரை ஊராட்சியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும், 125 நாள் வேலை முழுமையாக வழங்க கோரியும் ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வக்கீல் முத்துக்குமார் தலைமையில் நடந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மதியம் 1 மணி வரை யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கஞ்சி காய்ச்சி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மதியம் 2 மணி அளவில் உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை இரவு 7 மணி வரை நீடித்தது.
இதில் 100 நாள் வேலைத்திட்டம் அடுத்த வாரத்தில் இருந்து தினசரி 500 பேருக்கு வழங்கப்படலாம் எனவும், குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.