திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

0 15
Stalin trichy visit

திருச்சி, செப்.10-மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த 3 பெண் பயணிகளிடம் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு உள்ளது. இதனால் சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. தங்கம் கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் அது குறைந்தபாடில்லை. மேலும் அரியவகை உயிரினங்கள், வெளிநாட்டு பணங்களும் கடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு பேட்டிக் ஏர் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த நசிராபானு (வயது 46), சகுபர் நிஷா (53), குபுரா அம்மா (48) ஆகிய 3 பெண் பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் அந்த பயணிகளை தனியாக  அழைத்து சென்று சோதனை நடத்தினர். சோதனையில் அவர்கள் சங்கிலி வடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.  அவர்களிடம் இருந்து 648 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும்.

இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் பிடிபட்ட 3 பெண்களையும் விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து தங்கத்தை எதற்காக கடத்தி வந்தார்கள், யாரிடம் ஒப்படைக்க இருந்தனர் என்பன உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த 4 பயணிகளிடம் ரூ.1 கோடியே 31 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.