அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பட்டியல் தயாரிப்பு
திருச்சி, செப். 10 மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகள் பட்டியலை உளவுத்துறை சிறப்பு போலீஸ் அதிகாரிகள் ரகசியமாக தயாரித்து வருகிறார்கள்.
த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றதும், மக்களுக்காக ஆற்றிய முதல் உரையில், லஞ்சம் ஊழல் இல்லாத அரசாக எனது அரசு செயல்படும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களையும் சும்மா விடமாட்டேன். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த அறிவிப்பின் எதிரொலியாக தமிழக முழுவதும் அரசு அலுவலகங்களில் குறிப்பாக சார்-பதிவாளர் அலுவலகங்கள், மின்வாரிய அலுவலகங்கள், வட்டாரபோக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் நில அளவை துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அரசு ஊழியர்கள் தங்களது செல்போன்களில் ஜிபே மூலம் பணம் பரிவர்த்தனை செய்தது தொடர்பான தகவல்களையும் சேகரித்து வைத்து இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அரசு உயர் அதிகாரிகள் யார், யார்? அவர்கள் எந்தெந்த வகையில் லஞ்சம் வாங்குகிறார்கள்? எத்தனை வருடங்களாக அவர்கள் அந்த பதவியில் இருக்கிறார்கள்? என்கிற தகவல்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து வருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தின் உளவு துறையிலும் தனி போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியிலும் இந்த பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருச்சி மாநகராட்சி சார்பில் சமீபத்தில் விட்டப்பட்ட டெண்டர்கள், அதனை எடுத்த ஒப்பந்ததாரர்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான கட்டிடங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள், அவற்றுக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? இவற்றின் பின்னணி என்ன? என்பது பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து சென்னைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
உளவுத்துறை போலீசார் அனுப்பி உள்ள இந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் முக்கிய அதிகாரி ஒருவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இன்னும் சில அதிகாரிகள் மீதும் பணியிட மாறுதல் நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.