தொட்டியம் அருகே மருமகனை தாக்கியதை தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து: காவல்துறையினர் விசாரணை
திருச்சி, செப். 11 திருச்சி மாவட்டம், தொட்டியம் கோட்டை மேடு பகவதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 42). இவரது அக்காள் மகன்கள் ராகுல், நித்திஷ். இதில் நித்திஷ் தொட்டியத்தில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ந் தேதி புதிதாக வாங்கிய இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்களுடன் ராகுல் சென்றபோது, நாய் குறுக்கேவந்ததால் கீழே விழுந்ததில் வாகனம் சேதமடைந்தது.
வாகனத்தை சரிசெய்வது தொடர்பாக நித்திஷ், ராகுலின் நண்பர்களிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தொட்டியம் வடகரையை சேர்ந்த முருகன் (23), கோட்டைமேடு பகுதியை சேர்ந்த தேவா (20) ஆகியோர் நித்திஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நித்திஷ் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதையறிந்த இளையராஜா, சம்பந்தப்பட்ட நபர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில், சம்பந்தப்பட்டன்று மாலை இளையராஜாவின் வீட்டுக்குச் சென்ற முருகன் மற்றும் தேவா ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளையராஜாவை குத்தியதாகவும், தேவா கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த இளையராஜா தொட்டியத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகன் மற்றும் தேவா ஆகியோரை தேடி வருகின்றனர்.