தொட்டியம் அருகே விவசாயி அடித்துக்கொலை : போலீசார் விசாரணை

0 13
Stalin trichy visit

திருச்சி, செப்.11- தொட்டியம் அருகே காயங்களுடன் விவசாயி பிணமாக கிடந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள மகேந்திரமங்கலம் காவேரி நகரைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 58). விவசாய வேலை செய்து வந்தார். இவருக்கு மாரியாயி என்ற மனைவியும், பெரியசாமி (30), சரவணன் (25) என 2 மகன்களும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்ற சொக்கலிங்கம், இரவில் வீடு திரும்பவில்லை. இதனால் நேற்று காலை அவரது மகன் பெரியசாமி, சொக்கலிங்கத்தை தேடியபோது, ஜெயராம் என்பவரது வாழைத்தோட்ட கிதங்கில் சொக்கலிங்கம் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது தலையிலும், கையிலும் காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சொக்கலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, துப்புதுலக்கப்பட்டது. மோப்ப நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொக்கலிங்கத்திற்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாகவும், இதனால் குடும்பத்தினர் அவரை கண்டித்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அந்த பெண்ணின் மகனுக்கும், மற்றொருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினைக்கு சமாதானம் பேசுவதற்காக சொக்கலிங்கம் வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெரியசாமி அளித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து சொக்கலிங்கம் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.