“நம்ம கூட இருந்த நிறைய பேர் ஆக்சிடெண்டில் இறந்து இருக்காங்க” – இது திருச்சி சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பு அய்யாரப்பன் ஸ்பெஷல்!

0 480
Stalin trichy visit

எதிர்பாராமல் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் விபத்தாக முடிகிறது. இந்தியாவில், 2013ம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,37,572. மொத்த விபத்துகளுடன் ஒப்பிடுகையில் 2003 ஆம் ஆண்டில் 21.2 என்றிருந்த விகிதம் 2013 ஆம் ஆண்டில் 28.3 ஆக அதிகரித்து வருகிறது. தினம்தோறும் நம் அருகாமையில் இருப்பவர்களோ, தெரிந்தவர்களோ உறவினர்களோ என ஒருவரை சாலை விபத்துகளால் இழந்து வருகிறோம்.

என்னதான் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் வாகனத்தின் கட்டுப்பாடு நம் கையில்தான் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து ஓட்ட வேண்டும். திருச்சி மாவட்டத்தின் சாலை விபத்துகள் மற்றும் சாலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பை கடந்த 5 வருடமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார் இவர்!

திருச்சியில் சாலை சம்பந்தமாக எந்த கேள்விகளுக்கும், குறிப்பாக திருச்சி கரூர் சாலை பற்றிய அனைத்து தகவல்களும் இவரைத்தான் அனைவரும் அணுகுவார்கள், திருச்சி மாவட்டத்தின் ஒவ்வொரு குறைகளையும் கண்டறிந்து அதனை கேட்கும் சமூக ஆர்வலராக செயல்பட்டு வருபவர்.

ஆம், திருச்சி சமூக ஆர்வலர் அய்யாரப்பன்.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாரப்பன்(42). கடந்த 5 வருடங்களாக சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பு என்பதை தோற்றுவித்து, அதன் மூலம் பலரை இணைத்து சாலை விபத்துக்கள் மற்றும் அது குறித்த விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராக திருச்சி மாவட்டத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் எடுத்துக்கூறி ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறார்.

இதுகுறித்து திருச்சி அய்யாரப்பனிடம் தொடர்பு கொண்டு பேசினோம்….”நம்ம கூட இருந்தா நிறைய பேர் ஆக்சிடெண்டில் இறந்து இருக்காங்க. அதுமட்டுமில்லாம குறிப்பாக இந்த கரூர் சாலைக்காக தான் இந்த சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பை 5 வருடத்திற்கு முன்பாக என்னோட நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஆரம்பித்தோம். தற்போது இந்த கரூர் சாலை 64 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் அடைந்து உள்ளது.

சாலைகள் விபத்தில் சிக்கி இறப்பவர்கள், அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இனிவரும் காலங்களில் தமிழகம் முழுவதும் இந்த சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பை எடுத்துச் செல்வதற்காக ஆலோசனைகளும் சென்று கொண்டிருக்கின்றன. விளையாட்டுத்தனமாக என்னுடைய நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஆரம்பித்த குழு இது! ஆனால் இன்று இக்குழுவின் மூலம் நிறைய சாலை பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்

சத்தமே இல்லாமல் சாலை பணிகளை வெற்றிகரமாக நடைபெற உறுதுணையாக இருக்கும் சமூக ஆர்வலர் அய்யாரப்பனுக்கு திருச்சி மெயில் இணையதளம் சார்பாக வாழ்த்துக்கள். அவரை நீங்களும் வாழ்த்த விரும்பினால் இதுதான் அவருடைய தொலைபேசி எண் 9677734351.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.