ஸ்ரீரங்கத்தில் உலக சுற்றுலா தினத்தை விழிப்புணர்வு நடைபயணம்

0 22
Stalin trichy visit

திருச்சி, செப்.28 ஸ்ரீரங்கத்தில் உலக சுற்றுலா தினத்தை விழிப்புணர்வு நடைபயணம். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற நடைபயணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!

திருச்சி மாவட்ட உதவி ஆட்சியர் ராகுல் ராகவன் மற்றும் திருச்சி மாநகராட்சியின் ஆணையர் பொன்மணி ஆகியோர் கொடியசைத்து  துவக்கி வைத்தனர்..

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஸ்ரீரங்கம் உத்திர வீதியில் பாரம்பரிய நடைபயணம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சுற்றுலாத்துறையின் முக்கியத்துவம், தமிழகத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பொதுமக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் கொண்டு செல்லும் வகையில் இந்த விழிப்புணர்வு நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நடைபயணத்தின் போது தமிழகத்தின் பாரம்பரிய கிராமப்புற கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரம்பரிய உடைகளுடன் கலைஞர்கள் நடனமாடி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

திருச்சி மாவட்ட உதவி மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) ராகுல் ராகவன் மற்றும் திருச்சி மாநகராட்சியின் ஆணையர் திருமதி. பொன்மணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்

இந்த நடைபயணத்தில் சுற்றுலாத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர், மாணவர்கள், கிராமப்புற கலை நிகழ்ச்சி கலைஞர்கள், சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ஆம் தேதி கடைப்பிடிக்கப் படுகிறது. 2026-ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருளாக “சுற்றுலாத் துறையை மறுவடிவமைக்கும் டிஜிட்டல் செயல்திட்டம், செயற்கை நுண்ணறிவு” என்ற கருத்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குவது, சுற்றுலாத் தலங்களை உலக அளவில் பிரபலப்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவில் சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வரும் நிலையில், 2025-ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 428.55 கோடியாகவும், இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.53 கோடியாகவும் உயர்ந்துள்ளது. மேலும், சுற்றுலா மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருவாய் ரூ.2,76,831 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த உலக சுற்றுலா தின விழிப்புணர்வு நடைபயணம் ஸ்ரீரங்கத்தில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

Leave A Reply

Your email address will not be published.