“பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்; துணிப்பையை எடுப்போம்” விழிப்புணர்வு பரப்புரை
திருச்சி, செப்.28 பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்; துணிப்பையை எடுப்போம்”தண்ணீர் அமைப்பு சார்பில் துணிப்பை விழிப்புணர்வு பரப்புரை
திருச்சியில் “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்; துணிப்பையை எடுப்போம்” என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி துணிப்பை விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.
கடல்சார் உயிரியல் அறிஞரும், சூழலியல் எழுத்தாளருமான முனைவர் நாராயணி சுப்ரமணியன் அவர்களுடன், தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம், செயலாளர் முனைவர் கி.சதீஸ்குமார், தண்ணீர் அமைப்பு சார்ந்த முனைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே துணிப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்வில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கவும், மண், நீர் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும் அனைவரும் தங்களது அன்றாட வாழ்வில் துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், “கடைக்குச் செல்லும்போது துணிப்பையை மறக்காமல் எடுத்துச் செல்வோம்; பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்ப்போம்” என்ற உறுதிமொழியுடன் விழிப்புணர்வு துணிப்பைகள் வழங்கப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பிளாஸ்டிக் இல்லா சமூகத்தை உருவாக்குவதற்கான முக்கியமான விழிப்புணர்வு முயற்சியாக அமைந்தது.