த.வெ.க. அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவே இந்த ரெய்டு : முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி, அக்.29 த.வெ.க. அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவே இந்த ரெய்டு! முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி தில்லைநகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் இன்று காலை 7 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2-வது முறையாக சோதனை நடத்தினர். டி.எஸ்.பி ஹேமசந்திரா தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் 3 வாகனங்களில் வந்து சோதனையிட்டனர்.
சோதனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு,
இது பழைய வழக்கு தான். ஏற்கனவே இங்கு எல்லா இடத்தையும் பார்த்து விட்டார்கள். இந்த முறையும் பார்த்தார்கள். எதுவும் இல்லை. என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. எந்த ஆவணமும், மொபைலும் எடுக்கவில்லை. என் தம்பி மணிவண்ணனின் பிசினஸ் சம்பந்தப்பட்ட ஒரு ஆவணத்தை மட்டும் எடுத்து சென்றுள்ளனர்” என்றார்.
மேலும் “முன்னாள் அமைச்சர்களை silence பண்ணவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை திசை திருப்பவும் தான் இந்த ரெய்டு நடக்கிறது. நிறைய இடங்களில் கொலை, கொள்ளை நடக்கிறது, ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார்கள். அதை மறைக்கவே நேற்று ஒரு அமைச்சர் கைது, இன்று இந்த ரெய்டு என செய்திகள் வருகின்றன. இது திமுக தலைவர் சொன்னது போல் diversion தான்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “இது திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கு அல்ல. ED தான் search செய்து அரசுக்கு அனுப்பியது. திமுக ஆட்சியில் Detail Enquiry போடப்பட்டது. ஆட்சி முடிந்த பிறகு இவர்கள் தொடர்ந்து எடுத்து செல்கின்றனர். இது புதிதாக தயாரிக்கப்படும் வழக்கு” என்றும் விளக்கம் அளித்தார்.
“ஜெயலலிதா காலத்தில் எப்படி எல்லா அமைச்சர்கள் மீதும் நில அபகரிப்பு வழக்கு போட்டார்களோ, அதை நீதிமன்றம் மூலமாக வாதாடி வெளியே வந்தோமோ, அதே போல் இதையும் சந்திப்போம். உயர்நீதிமன்றம் என் மீது FIR போட சொன்னது. நாங்கள் Review Petition போட்டோம், அது தள்ளுபடி ஆனது. இப்போது உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். நீதிமன்றம் சொல்வதே இறுதி தீர்ப்பு” என்றார்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, “திமுக வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாது. தாராபுரத்தில் 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு வந்துள்ளோம், 20,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளோம். நாங்கள் நம்பிக்கையோடு செல்கிறோம், ஜெயிப்போம். காமராஜர் எதிர்த்தார், MGR எதிர்த்தார், ஜெயலலிதா எதிர்த்தார், இப்போது விஜய் எதிர்க்கிறார். எதிர்ப்பவர்கள் மாறுவார்கள், திமுக நிலையாக நிற்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.