திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

0 15
Stalin trichy visit

திருச்சி, நவ.25  தென் கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவ சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (நவ.24) மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

273 அடி உயரமுள்ள மலைக்கோட்டை உச்சியில், அருள்மிகு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள 40 அடி உயர கோபுரத்தில் உள்ள 5 அடி உயர செப்பு கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதற்காக 700 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து ஊற்றப்பட்டு, 300 மீட்டர் நீள பருத்தி துணியில் தயார் செய்யப்பட்ட திரி பயன்படுத்தப்பட்டது.

முன்னதாக அருள்மிகு தாயுமான சுவாமி, அருள்மிகு மட்டுவார் குழலம்மை, அருள்மிகு செவ்வந்தி விநாயகர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து பரணி தீபத்தில் இருந்து எடுக்கப்பட்ட தீப ஜோதி, மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

மலை உச்சியில் ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் 3 நாட்கள் தொடர்ந்து சுடர்விட்டு எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகா தீப தரிசனத்திற்காக திருச்சி மாவட்டத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோட்டையில் குவிந்தனர்.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

Leave A Reply

Your email address will not be published.