திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வரும் 19-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் (மலை உச்சியில்) கீழே இருந்து 273 அடி உரயமும், 417 படிகளும் கொண்ட மலைக்கோட்டை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள கார்த்திகை தீப கோபுரத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக நேற்று பூர்வாங்க பூஜை செய்து, தீபம் ஏற்றுவதற்கான மெகா திரியை தயார் செய்து கொப்பரையில் வைத்து எண்ணெய் ஊற்றும் பணி தொடங்கியது.
இதற்காக 300 மீட்டர் நீளமுள்ள பருத்தித் துணியால் பிரம்மாண்ட திரி தயாரிக்கப்பட்டது. இந்த திரியை தயார் செய்து, ஒரு கட்டு போல் கட்டி கொப்பரையில் வைக்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட திரியை தாயுமான சுவாமி சன்னதி பகுதியில் உள்ள கொடிமரத்துக்கு அருகில் தயாரித்து கயிறு கட்டி மேலே தூக்கி சென்றனர். பின்னர் பூர்வாங்க பூஜைக்கு பின்னர் கொப்பரையில் திரி வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த பிரம்மாண்ட திரி வைக்கப்பட்ட கார்த்திகை தீப கொப்பரையில் 900 லிட்டர் அளவுள்ள நல்லெண்ணெய், இலுப்பை எண்ணை, நெய் ஆகியவை கலந்து ஊற்றப்பட உள்ளது.
இந்த திரி ஒருவாரத்திற்கு எண்ணெய்யில் நன்றாக ஊரவைக்கப்படும். கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்படும் இந்த மகா தீபம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எரியும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, பேஸ்கார் வேலாயுதம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.