மணப்பாறை அருகே நள்ளிரவில் சரக்குவேன் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு – 40 பேர் காயம்

0 24
Stalin trichy visit

திருச்சி, அக்.26 மணப்பாறை அருகே நள்ளிரவில் சரக்குவேன் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு – 40 பேர் காயம். நிகழ்விடம் அருகே மேலும் இரண்டு தனியார் பேருந்துகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் இருந்து 46 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை நெல்லை, அரிகேசநல்லூரைச் சேர்ந்த மீரா மைதீன் (29) என்பவர்‌ ஓட்டிச்சென்றுள்ளார். நள்ளிரவு மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வேனின் பின் பகுதியில் பேருந்து மோதி உருக்குலைந்தது.  இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி பேருந்தில் இருந்தவர்கள் சப்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு விரைந்தனர். மேலும் 15 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து பேருந்தின் கண்ணாடியை உடைத்தும் அவசர கதவு வழியாகவும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தை சேர்ந்த பேருந்து உதவியாளர் (கிளீனர்) சிராஜ் உசேன் (36) உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 40 க்கும் மேற்பட்டோர் மணப்பாறை அரசு மருத்துவ மனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த மணப்பாறை எம்.எல்.ஏ கதிரவன் அரசு மருத்துவ மனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய சரக்கு வேனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது. இருப்பினும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்த நிலையில் அது கடத்தப்பட்ட ரேஷன் அரிசியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக வளநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தால் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அதே இடத்தில் மேலும் இரண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு பேருந்தில் இருந்த சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். நள்ளிரவில் விபத்து நடந்தாலும் மணப்பாறை, துவரங்குறிச்சி, விராலிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 108 ஆம்புலஸ்கள் மற்றும் தனியார் ஆன்புலன்ஸ் குழுவினர் விரைந்து வந்து செயல்பட்டு பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு சேர்த்ததால் உயிரிழப்பு பெருமளவில் தவிர்க்கப்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட இவ்விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.‌

 

Leave A Reply

Your email address will not be published.