மிளகு சாகுபடி தொழில்நுட்பங்களைக் கற்றறிந்த வேளாண் கல்லூரி மாணவர்கள்

0 15
Stalin trichy visit

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரத்தில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் பன்முகப் பயிர் சாகுபடி மேற்கொண்டு வரும் சாதனை விவசாயி சித்திரை சேனன் அவர்களின் பண்ணை மேலாண்மை முறைகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் நடைமுறை அறிவைப் பெற்றனர். இவருக்கு 2021-ஆம் ஆண்டு வேளாண் அறிவியல் நிலையம் (KVK) சார்பில் சாதனை விவசாயி விருது வழங்கப்பட்டுள்ளது.இவரது பண்ணையில் சுமார் 600 பாக்கு மரங்கள், 400 தென்னை மரங்கள் மற்றும் 150–200 மிளகுச் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அன்னாசி, கொய்யா,மாதுளை, வாழை உள்ளிட்ட பழப்பயிர்களுடன் தேக்கு, மகோகனி, வேங்கை மற்றும் கடம்பு போன்ற மரவகைகளும் ஒருங்கிணைந்த முறையில் வளர்க்கப்படுகின்றன.

மிளகு சாகுபடி குறித்த நடைமுறைப் பயிற்சி இக்கற்றல் அனுபவத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது. பாக்கு மற்றும் தென்னை மரங்களை ஆதார மரங்களாகப் பயன்படுத்தி மிளகுக் கொடிகளை வளர்க்கும் முறை, கொடிகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு, அறுவடைக்கான சரியான முதிர்ச்சி நிலையை அடையாளம் காணுதல், அறுவடை செய்த மிளகைப் பதப்படுத்துதல் மற்றும் வெயிலில் உலர்த்தி கருப்பு மிளகாக மாற்றுதல் போன்ற தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றறிந்தனர்.
மேலும், பண்ணையில் குழாய்கள் மற்றும் நீர்வழிக் கட்டுப்பாட்டுக் கதவுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் திறமையான நீர் மேலாண்மை முறைகள் குறித்தும் அறிந்துகொண்டனர். மரம் ஏறும் இயந்திரம், மரம் வெட்டும் கருவி மற்றும் புல் வெட்டும் இயந்திரம் உள்ளிட்ட வேளாண் உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளித்தல் மற்றும் சாகுபடிச் செலவுகளைக் குறைத்தல் போன்ற நடைமுறைகளையும் தெரிந்து கொண்டனர்.
பல்வேறு பயிர்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம் நிலத்தின் பயன்பாட்டை மேம்படுத்துதல், கூடுதல் வருவாய் வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பண்ணையின் நீண்டகால உற்பத்தித் திறனைப் பராமரித்தல் ஆகியவற்றில் இவரது பண்ணை மேலாண்மை முறை சிறப்பிடம் பெற்றுள்ளது.
இப்பண்ணைக் கற்றல் நிகழ்வின் மூலம், வேளாண் மாணவர்கள் மிளகு சாகுபடியின் தொழில்நுட்பங்கள், அறுவடை மற்றும் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணை முறை மற்றும் வேளாண் இயந்திரமயமாக்கலின் முக்கியத்துவம் ஆகியவற்றை நடைமுறை அடிப்படையில் கற்றறிந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.