திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டள்ள சம்பா தாளடி நெற்பயிரில் வடகிழக்கு பருவத்தில் பெய்த தொடர் மழைக்கு பிறகு ஆங்கங்கே பாக்டீரியல் இலை கருகல் நோய் தென்படுகிறது. தொடர்மழை காலத்தே நிலவும் காற்றினால் நெற்பயிரின் இலையில் ஏற்படும் காயங்கள் வழியே பாக்மரியா உள்ளே சென்று இலை கருகல் நோயை உண்டாக்கும். சன்னரக நெல் இரகங்களான பி.ப்பீ.ட்டி 5204 மற்றும் வெள்ளை பொன்னியில் இந்நோய் அதிக அளவில் தாக்ககூடிய வாய்ப்புள்ளது.
இந்நோய் பெரும்பாழும் கதிர் வெளிவரும் நேரத்தில் அதிகமாக தென்படும். ஆனால் சாதகமான தட்பவெட்ப நிலையில் இளம் பயிரையும் தாக்கும். நோய் தாக்கிய இளம் பயிர் நடவு நட்ட இரண்டு வாரங்களில் வாடி இறந்துவிடும். பாக்டீரியா மூலம் தாக்கப்படும் இந்நோயானது பயிரின் இலைகளில் காற்றினால் ஏற்படும் இலை காயங்கள் முழவதும் ஊடுறுவி பரவக்கூடியது. இலையின் ஓரப்பகுதிகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி பழுப்பு, மூலமாக பயிர் ஆரஞ்சு அல்லது மஞ்கள் நிறமாக மாறி பின்னர் இலையின் ஓரங்கள் வைக்கோல் நிறமாக மாறி காயும், காய்ந்த பாகத்தின் உட்பகுதி அலைகள் போன்று வளைந்து காணப்படும். சில நேரங்களில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக்கோடுகள் இலையின் நடுபாகத்தில் நடுநரம்புக்கு இணையாக இருபறமும் தோன்றும். நாளடைவில் இந்த கோடுகள் விரிவடைந்து இலையின் பெரும்பகுதி பாதிக்கப்படும். நோயின் தீவிரம் அதிகமாகும் போது இலைகள் முழுவதும் கருகி சருகாக பயிர் காய்ந்துவிடும்.
நடவின் போது நுனியை கிள்ளி நடவு செய்தல், காற்றுடன் கூடிய கடும் மழை. அதிகப்படியாக நீர்பாசனம் செய்தல், பனி மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 22 முதல் 26 டிகிரி செல்சியஸ் போன்றவை நோய் வேகமாக பரவ உகந்த சூழ்நிலையாகும். மேலுரத்தில் தழைசத்து மிகுதியாகவும் சாம்பல் சத்து உரங்களை குறைவாக இடும்பொழுது நோயின் வீரியம் அதிகரிக்கும். எனவே நெற்பயிருக்கு பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்தினை சாம்பல் சத்து உரத்துடன் கலந்து பயிரின் வளர்ச்சி நிலைகளில் மூன்று முறையாக பிரித்து இடவேண்டும். ஒவ்வொரு முறையும் தழைசத்து உரமான யூரியாவுடன் 5 பங்கிற்கு ஒரு பங்கு வேப்பம்பிண்ணாக்கு, பரிந்துரை செய்யப்படும் பொட்டாஷ் உரத்தையும் கலந்து இடவேண்டும்.
நோயினால் தாக்கப்பட்ட பயிரை அறுவடை செய்த பின்னர் மிஞ்சியிருக்கும் தூர் கட்டை மற்றும் இதர பகுதிகளை அழித்துவிடவேண்டும். நோய் தாக்கிய வயலில் அதிகமாக நீர் தேக்கி வைக்கக் கூடாது. மழைக்கு பின்னர் வயலில் தேங்கும் அதிகப்படியான நீரை வடித்துவிடவேண்டும்.நோய் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் ஏக்கருக்கு ஸ்டிரெப்டோசைக்கிளின் அல்லது 120 கிராம் ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் டெட்ராசைக்ளின் 18 கிராம் ஹைட்ரோகுளோரைடு கலந்த கலவையுடன் 500 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு 200 லிட்டர் நிரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை இக்கரைசலை தெளித்து பாக்டீரியல் இலை கருகல் நோயை கட்டுப்படுத்தலாம் என லால்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.சுகுமார் தெரிவித்துள்ளார்.