விமான நிலைய மோதல் வழக்கு: மதிமுக, நாம் தமிழர் கட்சியினரை விடுவித்து தீர்ப்பு

0 249
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 19  மதிமுக ஒருங்கிணைப்பாளர் வைகோவை ‘சுகர் பார்ட்டி’ என கிண்டலடித்தது தொடர்பான வழக்கில், இன்று திருச்சி மாவட்ட கூடுதல் கோர்ட் எண்.2 தீர்ப்பு அளித்தது.

திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 19.5.2018 அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார். பின்னர் இவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியவுடன், அவரைத் தொடர்ந்து வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர், எங்கே அந்த சுகர் பார்ட்டி கிளம்பியாச்சா? என கிண்டல் அடித்து பேசினர். இது அங்கு நின்றிருந்த மதிமுக தொண்டர்கள் காதில் விழ, இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் அங்கு நின்றிருந்த போலீசாரின் டூவீலர் மற்றும் பேரி கார்டுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இது குறித்து விமான நிலைய போலீசார், மதிமுகவை சேர்ந்த 5 பேர் மீதும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 14 பேர் மீதும் என மொத்தம் 19 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட 2வது கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த ஜூலை 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு சீமான் உட்பட அவரது கட்சியினர் மற்றும் மதிமுகவினர் நேரில் ஆஜராகி இருந்தனர். வழக்கு விசாரணைக்கு பின்னர், வழக்கின் தீர்ப்பு வரும் 19ம் தேதி (இன்று)அளிக்கப்படும் என நீதிபதி கோபிநாதன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார். வழக்கு விசாரணைக்கு சீமான் தவிர குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் வந்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.