தா.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திருச்சி, ஜன.19 முசிறி அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் – நெகிழ்ச்சியான சந்திப்பு.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கால் நூற்றாண்டு கால இடைவெளிக்கு பிறகு நண்பர்கள் மீண்டும் சந்தித்து கொண்ட நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
முசிறி அருகே தா.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1998 முதல் 2000-ம் ஆண்டு வரை பயின்ற மாணவர்கள், 25 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் அதே பள்ளி வளாகத்தில் ஒன்று கூடினர்.
பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த “மீண்டும் சந்திப்போம்” விழாவிற்கு, தங்களுக்குப் பாடம் கற்பித்த முன்னாள் ஆசிரியர்களை மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ஆசிரியர்களான தலைமலை, சிவலிங்கம், விஸ்வநாதன், மகேஸ்வரன், ரெங்கராஜ், தீனதயாளன் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர், பழைய மாணவர்களின் இந்த முயற்சியைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
தங்களின் வாழ்க்கைப் பாதைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்த ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் பொன்னாடை போர்த்தியும், நினைவுப் பரிசுகளை வழங்கியும் நெகிழ்ந்தனர்.
25 ஆண்டுகால நட்பைக் கொண்டாடும் விதமாக, தாங்கள் பயின்ற பள்ளிக்குத் தேவையான பீரோ உள்ளிட்ட தளவாடப் பொருட்களை மாணவர்கள் அன்பளிப்பாக வழங்கினர்.
பள்ளிப் பருவத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
விழாவின் நிறைவாக, பங்கேற்ற அனைவருக்கும் தடபுடலான சைவ விருந்து பரிமாறப்பட்டது.
25 ஆண்டுகள் கடந்தும் மாறாத நட்புடன் ஒன்று கூடிய இந்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு, அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று முசிறி அருகே உள்ள மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் 1996 – 1998 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது பள்ளி முன்னாள் ஆசிரியர்களை கௌரவித்தனர்.