திருச்சியில் டிராவல்ஸ் மேலாளரிடம் ரூ.20 லட்சம் நகைகளை பறிக்க முயற்சி: ஜெயிலர் மகன் உள்பட 4 பேர் கைது

0 19
Stalin trichy visit

திருச்சி, செப். 12  திருச்சி காந்தி மார்க்கெட் அருகே பரபரப்பு
டிராவல்ஸ் மேலாளரிடம் ரூ.20 லட்சம் நகைகளை பறிக்க முயற்சி
ஜெயிலர் மகன் உள்பட 4 பேர் கைது

திருச்சி காந்திமார்க்கெட் அருகே தனியார் டிராவல்ஸ் நிறுவன மேலாளரிடம் ரூ.20 லட்சம் நகைகளை பறிக்க முயன்ற ஜெயிலர் மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் கருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 52). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் வெளிநாடுகளில் இருந்து வருவோரின் நகைகளை வாங்கி வியாபாரம் செய்து பணத்தை அவர்களிடம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் தொழில் நிமித்தமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேஸ்வரன் திருச்சி வந்தார்.

திருச்சி கன்டோமென்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அவர் அறைஎடுத்து தங்கினார். பின்னர் அவர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் வெளிநாட்டு பொருட்களை வாங்கினார். அந்த பொருட்களை பார்சலில் அனுப்புவதற்காக நகைகள் மற்றும் பொருட்களுடன் நேற்று முன்தினம் காலை காந்தி மார்க்கெட் வாழைக் காய்காய் மண்டி பகுதியில் பார்சல் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது அவர் அருகே உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். அங்கு திடீரென சொகுசு காரில் வந்த 4 பேர் கும்பல் வெங்கடேஸ்வரனிடம் இருந்து நகைகளை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து காந்தி மார்க்கெட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்த கருணாகரன் (44), கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருள்மணி (32), சென்னை புழல் சிறை ஜெயிலர் பாரத் கென்னடியின் மகன் சுதன் ராம்தேவேந்திரா (32), சிவகங்கை குடிக் கரை பகுதியை சேர்ந்த மகேந்திரன் (48) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் வெங்கடேஸ்வரன் நகைகளுடன் சென்றதை நோட்டமிட்டு கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இதைடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் காந்திமார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.