திருச்சி மாநகராட்சி ஆணையராக பொன்மணி பதவியேற்பு
திருச்சி, செப். 12 திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வீர பிரதாப் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக என்.பொன்மணி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்தார. இதனைத்தொடர்ந்து நேற்று அவர் திருச்சி மாநகராட்சியின் 30-வது ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார். பொன்மணியின் சொந்த ஊர் மதுரை மாவட்டம். இவர் 2020-21-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பேட்ஜை சேர்ந்தவர் ஆவார். மேட்டூரில் சப்-கலெக்டராக பணியாற்றிய இவர் பின்னர் வணிகவரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
திருச்சி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற பின்னர் பொன்மணி நிருபர்களிடம் கூறுகையில், திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலை, தெரு விளக்குகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன். மாநகராட்சி பணியை பொறுத்த வரை எனக்கு இது ஒரு புதிய பணி ஆகும். அடிப்படை வசதிகள் மற்றும் பொது பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் என்னிடம் எப்போதும் அணுகலாம் என்றார். புதிய ஆணையர் பொன்மணிக்கு மாநகராட்சி அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.