முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

0 222
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 17  திருச்சியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களா கலந்து கொண்ட நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள்,சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கி பாராட்டினர்கள்..

இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3000/-, இரண்டாம் பரிசு தலா ரூ.2000/- மற்றும் மூன்றாம் பரிசு தலா ரூ.1000/- மொத்தம் ரூ.41,18,000/- NEFT மூலம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரின் மிகசிறப்பான திட்டம், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பெறும் வரவேற்பினை பெற்ற இத்திட்டம் தற்போது பொதுபிரிவு, பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகிய 5 வகை பிரிவினர்களுக்கு மாவட்ட அளவில் தடகளம், கபாடி, இறகுபந்து, வாலிபால், சிலம்பம், சதுரங்கம், கிரிக்கெட், கூடைப்பந்து, கையுந்துபந்து, சிறப்பு கையுந்துபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைபந்து மற்றும் எறிபந்து போட்டிகள் 12.02.2023 முதல் 28.02.2023 வரை அண்ணா விளையாட்டரங்கம். ஜே.ஜே. பொறியியல் கல்லூரி மற்றும் ஜமால் முகமது கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இவ்விளையாட்டு போட்டிகளில் 5 பிரிவுகளிலும் 3912 ஆண்கள் மற்றும் 1879 பெண்கள் என மொத்தம் 5791 நபர்கள் கலந்து கொண்டார்கள்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.நேரு..

திருச்சி மாவட்டத்தில் பாதாள சாக்கடை பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் முழுமையாக பணிகள் முடிக்கபடும். புதிய காவிரி பாலம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடிக்கல் நாட்டுவதற்கும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அனுமதி கேட்டுள்ளோம், அனுமதி கிடைத்தவுடன் விரைவில் நடைபெறும். முதலமைச்சரின் கள ஆய்வு பணிகள் விரைவில் முழுவீச்சில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் என்றார்

இந்த நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், செளவுந்தர பாண்டியன்,மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆண்டனி ஜோயஸ் பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.