திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட வலியுறுத்தி “நம்ம திருச்சி ஓட்டம்” என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆர்டிஓ அருள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டமானது, மன்னார் புரம், காஜா மலை, ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக மீண்டும் கல்லூரியை வந்து அடைந்தது. இதில் 15 வயதிற்குட்பட்டோருக்கு 2 கிமீ தூரமும், 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு 5 கிமீ தூர ஓட்டம் என இருபிரிவுகளில் நடத்தப்பட்டது.
மேலும் நிகழ் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தில், 2 கிமீ ஓட்டத்தில் பாய்லர் பிளாண்ட் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஹபோன்ராஜ் முதலிடத்தை பிடித்தார். மேலும் 15 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற தங்களது குழந்தைகளுடன் பெற்றோர்களும் சேர்ந்து ஓடியதை காணமுடிந்தது, இது பெற்றோர்களும் பிட்னஸ் ஆக இருக்க வேண்டும் என குழந்தைகள் அறிவுறுத்தியது போல அமைந்தது.