கிணற்றில் வீசப்பட்ட ஆண் சிசு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை
திருச்சி, ஜன.24 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய ஜேக்கப் (வயது 49). இவரது மனைவி கடந்த, சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகள் மரிய வினோதினிக்கு (வயது 28), திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக கணவரை பிரிந்து, தனது தந்தையுடன் வசித்து வந்த நிலையில் மரியவினோதினி கர்ப்பமானார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, வயிற்றில் கட்டி என்று சமாளித்துள்ளார். இவருக்கு கடந்த, 6ம் தேி வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், அந்த குழந்தையை சிவப்பு பையில் போட்டு கட்டி, செக்கனத்தில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிராம பொதுகிணற்றில் மரியஜேக்கப் வீசி கொலை செய்துள்ளார்.
பிறந்த குழந்தை மாயமானது குறித்து தகவலறிந்த குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஊரில் தவறாக பேசுவார்கள் என்பதால் தனது மகளின் குழந்தையை கிணற்றில் வீசிவிட்டதாக கூறி, மரிய ஜேக்கப், நேற்று வையம்பட்டி போலீசில் சரணடைந்தார்.
இந்நிலையில் இன்று வருவாய்த்துறையினர் முன்னிலையில் தீயணைப்புத்துறையினர் மூலம் கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் வைக்கப்பட்டிருந்த கட்டைப்பையை மீட்டனர். வெளியே எடுத்து பார்த்தபோது பையில் உள்ளே அழுகிய நிலையில் இருந்தது. பின்னர் அரசு மருத்துவர் மூலம் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குழந்தையின் சடலத்தை உறவினரிடம் ஒப்படைத்தனர். பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.