துப்புரவு பணியாளர் அடித்துக் கொலை
திருச்சி மாவட்டம், முசிறி மலையப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவருக்கு திருமணம் ஆகி நாகலட்சுமி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் கரூர் மாவட்டம், குளித்தலை பெரிய பாலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். செல்வராஜின் தாயார் சரோஜா முசிறி நகராட்சியில் குப்பை அள்ளும் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் செல்வராஜ் தனது தாயாருக்கு பதிலாக குப்பை அள்ளும் வேலைக்கு சென்று வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற செல்வராஜ் பணிகள் முடித்துவிட்டு உறவினர் மணி என்பவருடன் முசிறி அருகே கொக்கு வெட்டியான் சுவாமி கோவிலில் கிடாவெட்டு கறி விருந்துக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கோவிலுக்கு அருகில் காவிரி ஆற்றிற்கு செல்லும் பாதையில் செல்வராஜ் தலையில் படுகாயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அவரது உறவினர்கள் தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று செல்வராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கறிவிருந்திற்காக சென்ற கூலி தொழிலாளி செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.