பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி, ஜூலை 10 ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் பறவைகள் பூங்கா பணிகளை விரைந்து முடிக்குமாறு அமைச்சர் கே.என்.நேரு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருச்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 13.70 கோடி மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டார் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைத்திட திட்டமிடப்பட்டு இதற்கான பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த பணியினை அமைச்சர் திரு.கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த பூங்காவில் செயற்கையான முறையில் அருவிகள் மற்றும் குளங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த பூங்காவில் அரிய வகை பறவைகளும் வளர்க்கப்பட உள்ளன. மேலும் குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என செயற்கையாக அமைக்கப்பட இருக்கின்றன. மலைகள், காடுகள் கடற்கரை சமவெளி மற்றும் பாலைவனம் போன்றவற்றை தத்துரூபமாக அமைக்கப்பட இருக்கின்றன. தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக அமைவிடங்களும், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடை நிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இதில் 50 பேர் உட்காரும் வகையில் அறிவியல் பூர்வ படங்கள் திரையிடப்படவும் இருக்கின்றன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த பறவைகள் பூங்காவில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் மிக குறைவாக உள்ளது. தற்போது சுற்றுலா பயணிகளுக்கு வரப் பிரசாதமாக இந்த பறவைகள் பூங்கா அமைய உள்ளது. தற்போது பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. தற்போது அங்கு நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், சிறந்த முறையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், நகரப் பொறியாளர் சிவபாதம், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.