எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டத்தால் கட்டுமான பணிகள் பாதிப்பு
திருச்சி, ஜூன் 25 முசிறியில் திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் 47 ற்கும் மேற்பட்ட ஜேசிபி களை நிறுத்தி வைத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம், முசிறியில் திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் 47 ற்கும் மேற்பட்ட ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகன உரிமையாளர்கள், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், போராட்டத்தின் மூன்றாம் நாளாக இன்றும் வாகனங்கள் இயங்காததால் பணிகள் முடங்கியுள்ளன,
சமீபகாலமாக டீசல், ஆயில், டயர்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது, மேலும், இன்சூரன்ஸ் பிரீமியம், சாலை வரி மற்றும் புதிய வாகனங்களின் விலை உயர்வு என பல்வேறு கூடுதல் நிதிச்சுமை உரிமையாளர்களைப் பாதித்துள்ளது, இந்த விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, தற்போதைய வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், “டீசல் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வால் எங்களால் பழைய வாடகையில் வாகனங்களை இயக்க முடியவில்லை. எனவே, குறைந்தபட்சமாக 2 மணி நேரத்திற்கு ரூ. 4,500 என்றும், 1 மணி நேரத்திற்கு ரூ. 1,600 என்றும் வாடகை கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வரும் வரை எங்களது போராட்டம் தொடரும்,” எனத் தெரிவித்துள்ளனர்.
முசிறி பகுதிகளில் உள்ள திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தால், இப்பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் மற்றும் மண் அகற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.