ஓடும் பேருந்தில் ரூ.14 லட்சம் மதிப்பிலான வைரங்கள் திருட்டு: 3 பேர் கைது
திருச்சி அக்.24 மதுரை தொட்டியம் கிணறு சந்து பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். (வயது 69).இவர் வைர வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று திருச்சி ஜான் பாஷா தெரு பகுதியில் உள்ள வைர நகைகள் சோதனை செய்யும் கடைக்கு வந்தார். அங்கு தனது வைரங்களை சோதனை செய்த பின்னர், தனது சட்டை பாக்கெட்டில் வைரங்களை எடுத்து வைத்துக் கொண்டு, திருச்சி தேவர் ஹால் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறினார். பஸ் சிறிது தூரம் சென்றவுடன் பாக்கெட்டில் இருந்த வைரங்களை காணவில்லை.உடனடியாக பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய செல்வராஜ் இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வைரங்களை திருடியதாக மதுரை மேலூர் பாண்டியன் நகரை சேர்ந்த முகமது சையது இப்ராகிம் (வயது 28 ),மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சரவணன் (வயது 32 ), மதுரை உத்தங்குடியை சேர்ந்த பாண்டியன் (வயது 60) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என காந்தி மார்க்கெட் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.