முன்னாள் அமைச்சர் நேருவின் விமர்சனங்களுக்கு துரை வைகோ பதிலடி!
திருச்சி, செப்.18 முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் விமர்சனங்களுக்கு துரை வைகோ கார சாரப் பதிலடி.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக தரப்பில் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது.
தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தொண்டர் ஒருவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுயா எனக் கூறியது அமைச்சர் கே.என். நேருவால் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது தான். அந்த கூட்டத்தின் போது தான் கருப்பு சட்டை அணிந்திருந்தேன். அதை கழட்டச் சொன்னதால் தனது தன்மானம் பாதிக்கப்பட்டு கோபத்தில் கத்தினேன்.
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.தொடர்ந்து பேசிய அவர், “தலைவர் வைகோ மற்றும் மதிமுக தொண்டர்களுக்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். எனது அரசியல் வருகை ஒரு விபத்து என்றே கருதுகிறேன். மதிமுகவை உதயசூரியன் சின்னத்தில் இணைக்க நான் கோரிக்கை விடுத்ததாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியதில் துளி அளவும் உண்மையில்லை. பல சமயங்களில் நேரு என்னிடம் பேசும்போது, கலைஞருடன் திமுக முடிந்துவிட்டது, இந்த பையனை (ஸ்டாலின் மற்றும் உதயநிதி) வைத்து அரசியல் பண்ண முடியாது என்று கூறியுள்ளார். இதுதான் கே.என்.நேருவின் உண்மை முகம்” என்று சாடினார்.
மேலும், திருச்சியை விட்டு கிளம்பும் வரை தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம்.
மதிமுகவைச் சேர்ந்த இருவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு
எம்.எல்.ஏ ஆகிவிட்டு, தற்போது அறிவாலய கழிவுநீரில் முத்துக்குளிக்கின்றனர்.
அவர்களை திமுகவைச் சேர்ந்த சிலரே இயக்குகின்றனர்.
தேர்தல் நேரத்தில் தன்னைப்பற்றி யூடியூபில் அவதூறுகளைப் பரப்பியது இவர்கள்தான்
(கே. என் நேரு தரப்பு ) என்று பின்னர் தெரியவந்தது எனக் குறிப்பிட்ட அவர், தற்போதும் அதே வேலையைத் தொடங்கியுள்ளனர் என்றார்.
“மக்கள் பணியுடன் நல்ல அரசியல் செய்ய நினைக்கிறேன். ஆனால் தனிமனித தாக்குதல், எனது குடும்பத்தைக் கொச்சையாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நான் பயப்பட மாட்டேன். அந்த அரசியல் எனக்கும் தெரியும். என்னை மிரட்ட நினைத்தால் அது நடக்காது. எந்த அளவுக்கு என்னை மிரட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு எனது அரசியல் வேகம் எடுக்கும் என்பதை திமுக தலைமையிடம் சொல்லிக் கொள்ளுங்கள்” என்று எச்சரித்தார்.
மேலும், மறைமுகமாகத் தாக்குவது கே.என்.நேருவின் ஸ்டைல் என்றும், அவர் தனது சொந்த கட்சியினர் மீதே இத்தகைய தாக்குதல்களை நடத்துவார் என்றும், திருச்சியின் முக்கிய ஆளுமை மையான ஒருவர் (அன்பில் மகேஷ் பொய்யா மொழி ) அரசியலில் தோற்பதற்கு கே.என்.நேரு தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
தனது வயது குறித்தும் மிசா குறித்தும் நேருவுக்குத் தெரியவில்லை என்று சாடிய அவர், “நான் பிறந்தது 1972 ஆம் ஆண்டு. 1975-1976 காலகட்டத்தில் மிசா வந்தபோது நான் பாளையங்கோட்டையில் பிளே ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். மிசா வந்த வருடம் கூட கே.என்.நேருவுக்குத் தெரியவில்லை” என்றார்.
முதல்வர் விஜய் மற்றும் அரசுக்கு நன்றி
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பேரறிஞர் அண்ணா முன்னிலையில் வைகோ உரையாற்றிய வரலாற்றுப் புகைப்படம் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தற்போது அரசால் வைக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
மேலும், சென்னைக்கு பன்னாட்டுப் போட்டிகளைக் கொண்டு வருவதை ஒரு முதலீடாகப் பார்க்க வேண்டும் என்றும், இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்றும் குறிப்பிட்டார். முதலீடு சம்பந்தமாக லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு நட்பு ரீதியாக நடிகர் அஜித்தைச் சந்தித்துள்ளது குறித்தும் அவர் தனது பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.