மணப்பாறை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் மின்வாரிய ஊழியருக்கு கத்திக்குத்து
திருச்சி, ஜூலை 7 மணப்பாறை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் மின்வாரிய ஊழியருக்கு கத்திக்குத்து. சிசிடிவி காட்சிகள் வெளியானது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கல்பாளையத்தான்பட்டி ஜேசுராஜ் (வயது 44). இவர் மருங்காபுரி மின்சார வாரியத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வேளாங்கண்ணி (எ) மூக்கன் (வயது 46) என்பவருக்குமிடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வேளாங்கண்ணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சேசுராஜ் தனக்கு தரவேண்டிய 8 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் 5 வருடமாக இருவரும் பேச்சுவார்த்தை இன்றி இருந்து வந்துள்ளனர். இருப்பினும் அவ்வப்போது வேளாங்கண்ணி எனக்கு இன்னும் வட்டிக்காசு தர வேண்டும் என அடிக்கடி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சேசுராஜ் வேலைக்கு செல்வதற்காக கல்பாளையத்தான்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் பின்புறமாகச் சென்ற வேளாங்கண்ணி தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சேசுராஜ் முதுகு, வயிறு, கை மற்றும் நெஞ்சு பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் வேளாங்கண்ணியை பிடித்துக் கொண்டனர். பின்னர் காயமடைந்த சேசுராஜ் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேசுராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வேளாங்கண்ணியும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேசுராஜ் சம்பவ இடத்தில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தபோது பின்னால் சென்று வேளாங்கண்ணி கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.