முசிறியில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, பிப்.12 முசிறி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் சேகர் விஜயன், கனிமொழி, உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி பேசினர். அப்போது பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறையை உருவாக்க வேண்டும், எடை தராசு நியாய விலை கடைகள் உள்ள விற்பனை நிலையத்தையும் இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருட்கள் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், ஐ.ஏ.எஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஊதிய மாற்ற குழு விற்பனையாளர்களுக்கு, இளநிலை உதவியாளர் ஊதியமும், எடையாளருக்கு அலுவலக உதவியாளர் ஊதியமும், பிப்ரவரி இறுதிக்குள் ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும், நியாய விலை கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்ய வேண்டும், தாயுமானவர் திட்டத்திற்கு உள்ள பிரச்சனைகளை களைய வேண்டும், அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஓய்வுதியும் வழங்க வேண்டும், நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு நேரடியாக எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும், மகளிர் நியாய விலை கடையை அரசே நடத்தி அப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் நியாய விலைக்கடை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.