பாரதிதாசன் பல்கலை.யில் இசைக்கருவிகள் வாசிப்பு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழா
திருச்சி, டிச. 8 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சுயதொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ், கிதார், வயலின், கீபோர்டு, டிரம்ஸ் போன்ற இசைக்கருவிகள் வாசிப்புக்கான படிப்புகளை முடித்து, தேர்ச்சியடைந்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழகத்தின் காஜாமலை வளாக IECD அரங்கில், சனிக்கிழமை மாலை நிகழ்ந்தது.
மேற்கண்ட பயிற்றுவிப்புகளில் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை முடித்து, முதன்மை இடங்களில் தேறியவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. தேர்ச்சியடைந்த. ஏனையோருக்குப் பல்கலைக்கழக இலச்சினையுடன் பட்டயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாண்ட்போர்ட் பள்ளியின் முதல்வர் அருட் சகோதரர் இராபர்ட், திரை இசையமைப்பாளர் ஜெயா கே தாஸ், ஐ.ஈ.சி.டி இயக்குநர் ராம் கணேஷ் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.
முன்னதாக டிரினிடி இசைப் பள்ளியின் மூத்த ஆசிரியர் அகிலன் வரவேற்றார், மாணவி வைத்திய லெட்சுமி நிகழ்வை நெறியாள்கை செய்ய, மாணவர் ரோகித் சரவணன் நன்றி கூற, நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. மாணவர்கள் தங்கள் இசைத் திறமைகளை சிறப்பாக அரங்கேற்றி, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.