கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றும் நோக்கில் பயணம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
திருச்சி, மார்ச் 16 தமிழ்நாடு அரசின் பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள இடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் திருச்சியில் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள தனியார் (ராசி, சுமதி) புத்தக வெளியிட்டு நிறுவனங்களின் புத்தகக் கடைகளில் இரண்டு ஸ்டால்களை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த பேட்டியில், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளோம். மொழி பெயர்த்துள்ளோம். அந்த புத்தகத்தை எல்லாம் குறைந்தபட்சம் 100 இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் சென்னையிலுள்ள (டி.பி.அய்.) அலுவலகத்திற்கு தேடி வந்து வாங்குவதை காட்டிலும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாங்கும் வகையில் கொண்டு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டோம். தற்போது யாரும் பார்க்காத சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் புகைப்படத்துடன் கூடிய புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து ஒவ்வொன்றையும் புதிதாக கொண்டு வரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சென்னையில் தனியார் (ஹிக்கிம்பாதம்ஸ்) புத்தக நிலையத்தில் ஸ்டால் அமைத்துள்ளோம். இதே போல திருச்சியில் சிங்காரத்தோப்பு பகுதியில் தனியார் (ராசி, சுமதி) புத்தக நிலையங்களில் ஸ்டால் அமைத்துள்ளோம். பள்ளி மாணவனாக இருக்கும்போது இங்கு தான் புத்தகங்கள் வாங்கினேன் அந்த நினைவுகள் இப்போதும் இருக்கிறது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் கொண்டு செல்ல உள்ளோம். புதிய கல்விக் கொள்கைக்கு புதிய குழுவை உருவாக்குவோம். தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையின்படி நம்முடைய மாநிலத்திற்கு என்ன தேவையோ அதன்படி கல்வி திட்டம் உருவாக்கி உள்ளோம். முதலாவது கல்வியை ஒன்றிய அரசின் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். அதை நோக்கி தான் எங்கள் பயணம் இருக்கிறது. மாணவர் படிப்பில் அரசியல் செய்யக்கூடாது. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு என்றும் ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் தெரிவித்தார்.