மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் செல்போன் திருட்டு
திருச்சி, செப்.26 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு தலைமை மருத்துவமனையில் 60 படுக்கைகள் உள்ளன. 15 செவிலியர்கள், 10 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். மேலும் மண்ணச்சநல்லூர் சுற்றியுள்ள 35 ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் முசிறியில் இருந்து பணிக்கு வந்த பெண் மருத்துவர் பிரியா மருத்துவமனையில் நோயாளிகளை பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது தனது செல்போனை பார்த்தபோது டேபிள் மேல் வைத்திருந்த செல்போனை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தலைமை மருத்துவரிடம் இதை குறித்து தெரிவித்தார். பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தனது கால்களில் அவரே கட்டுகளை போட்டுக்கொண்டு மருத்துவர் அறையை அடிக்கடி நோட்டமிட்டுள்ளார். அதனை தொடர்ந்து பெண் மருத்துவர் பிரியாவிடம் நோயாளிப்போல் அமர்ந்து அவரிடம் பேசிக் கொண்டு அவரின் டேபிள் மேல் வைத்திருந்த செல்போனை திருடி அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் வெளியே உள்ள சிசிடிவி ஆராய்ந்து பார்க்கும் பொழுது மருத்துவமனைக்கு வந்த நோயாளியிடம் லிப்ட் கேட்டு அங்கிருந்து சென்றது தெரிய வந்தது.
பின்னர் இச்சம்பவம் குறித்து மனச்சநல்லூர் காவல் நிலையத்தில் பெண் மருத்துவர் பிரியா நேரில் சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராமன் வழக்கு பதிவு செய்து செல்போன் திருடிய மர்ம நபரை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.