ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் திடீர் ஆய்வு
இராணிப்பேட்டை, அக். 9 பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பயணித்து வருகின்றார்.
அவ்வகையில் இன்று இராணிப்பேட்டை ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 14417 எண் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அந்த எண் பதிக்கப்பட்ட உடையுடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பள்ளியினுள் நுழைந்த அமைச்சர் காலை உணவு உட்கொள்ளும் மாணவர்களிடன் உரையாடினார். பின்னர் பள்ளி வளாகத்தைப் பார்வையிட்டு கழிவறைக்கு அருகே இருந்த குப்பைகளை அகற்றுமாறு கூறினார். பள்ளியில் உள்ள சிறு நூலகம், எண்ணும் எழுத்தும் வகுப்பறை போன்றவற்றை பார்வையிட்டு தலைமையாசிரியருக்கும், ஆசிரியருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து தூய்மைப் பணியாளர் பற்றி கேட்டு அவரை அழைத்துப் பேசினார் அமைச்சர். அவரிடம் பேசிய தூய்மைப் பணியாளர் பள்ளியை தினமும் தூய்மைப்படுத்தி நம்ம வீடு மாதிரி பாத்துக்குறேன் என்று கூறினார்.