தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் – எடப்பாடி பழனிசாமி பேட்டி

0 18
Stalin trichy visit

திருச்சி, அக்.31  திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில் :-

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி கிலோவுக்கு ₹20-ம், பருப்பு 60 சதவீதமும் உயர்ந்துள்ளன. எண்ணெய், சர்க்கரை மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் ₹100 கோடியில் ‘விலை கட்டுப்பாட்டு நிதியம்’ உருவாக்கி, கூட்டுறவுத்துறை மூலம் வெளிமாநிலங்களில் இருந்து அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்து விலை ஏற்றத்தைத் தடுத்தோம். ஆனால், இந்த அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் 1974-ல் கட்சியில் சேர்ந்து, உழைத்து, 11 முறை தேர்தலில் நின்று மக்களுக்காகச் சேவை செய்து எம்.எல்.ஏ ஆனவன். ஆனால், என் அனுபவத்தின் வயதுகூட இல்லாத அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ரீல்ஸ் மூலம் எம்எல்ஏ ஆனவர். அவருக்கு என் அனுபவம் அளவிற்கு கூட வயது இருக்காது.

மக்களுக்காக உழைத்தால் மட்டுமே நன்மதிப்பு கிடைக்கும். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தெரியாமல் இந்த அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

கடந்த ஆறு மாத காலத்தில் ₹40,000 கோடி கடன் வாங்கியதே இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. தினமும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி மற்றும் பாலியல் குற்றச் செய்திகளே பத்திரிகைகளில் அதிகமாக வருகின்றன. குழந்தைகளைக் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்கள் பயப்படும் அளவுக்குப் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சிறையிலிருந்து கைதிகள் எளிதாகத் தப்பிச் செல்கின்றனர். குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாத கையாலாகாத அரசாக இது செயல்படுகிறது.

நாங்கள் உழைத்து ஆட்சிக்கு வந்தவர்கள். டிவிகே ரீல்ஸ் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள். அவர்களுக்கு ஜாக் பாட் அடித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு அணை உட்பட ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மேலும், 6 புதிய மாவட்டங்கள், 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை உருவாக்கி சரித்திர சாதனை படைத்துள்ளோம்.

அதிமுக ஆட்சியில் ₹14,000 கோடி நிதி ஒதுக்கப்பட்ட காவிரி – குண்டாறு கூட்டு நதி இணைப்புத் திட்டத்திற்கு, தற்போதைய அரசு வெறும் ₹150 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. மீண்டும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்போவதாகக் கூறுவது இந்த ஆட்சியின் அறியாமையையும் கையாலாகாத தனத்தையும் காட்டுகிறது.

முதல்வர் விஜய் அரசு அலுவலரைப் போல காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்திற்கு வந்து மாலை 6 மணிக்கு வீட்டுக்குச் சென்று விடுகிறார். ரீல்ஸ் மட்டுமே இந்த ஆட்சியின் அஸ்திவாரமாக உள்ளது. இந்த ஆறு மாத தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு நான் கொடுக்கும் மதிப்பெண் ‘மைனஸ் பூஜ்ஜியம்’.

அதிமுக ஆட்சியில் தமிழகத்தை உபரி மின்சாரம் கொண்ட மாநிலமாக மாற்றி அண்டை மாநிலங்களுக்கும் வழங்கினோம். ஆனால், தற்போதைய அரசு திட்டமிடல் இன்றிச் செயல்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தபோது மின்தடை ஏற்பட்டுள்ளது. அதற்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு அரசு பதில்களை மட்டுமே கூறிக்கொண்டிருக்கிறது.

அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான். இங்கிருந்து சென்றவர்கள் வெவ்வேறு கட்சிகளில் செட்டில் ஆகிவிட்டனர் எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.