திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரியகுருக்கை கிராமத்தில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் பண்ணைத் தோட்டம் உள்ளது .இந்த பண்ணை தோட்டத்தினை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் 40 வயதான செந்தில் என்பவர் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து பண்ணை தோட்டத்தை நிர்வகித்து வருகிறார்.
இந்த தோட்டத்தில் லால்குடி அருகே விடுதலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் முருகேசன் என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தோட்டத் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு தினசரி ரூபாய் 150 வீதம் கூலியாக கொடுக்கப்பட்டு வந்துள்ளது. முருகேசனின் செல்போனுக்கு அவரது மனைவி சகுந்தலா தொடர்பு கொண்டால் அவரது கணவர் முருகேசன் பேசாமல் தோட்டத்தின் உரிமையாளர் செந்தில் பேசி,தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார் என கூறி வந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த முருகேசனின் மனைவி சகுந்தலா மற்றும் அவரது குழந்தைகள் பண்ணை தோட்டத்திற்கு கடந்த 22 ம் தேதி சென்று பார்த்தபோது அப்போதும் தோட்டத்தின் உரிமையாளர் செந்தில் உங்களது கணவர் தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். இப்போது பார்க்க முடியாது என திருப்பி அனுப்பி உள்ளார் . இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி தோட்டத்து உரிமையாளர் செந்தில் அவரது ஆதரவாளர்கள் சிலர் தோட்டத் தொழிலாளி முருகேசனை உடலில் ரத்த காயங்களுடன் உடல் மிகவும் மெலிந்த நிலையில் அவரது வீட்டில் வந்து விட்டுச் சென்றனர்.விட்டுச் சென்ற அரைமணி நேரத்திலேயே முருகேசன் உயிரிழந்தார்.
இதுகுறித்து முருகேசனின் மனைவி சகுந்தலா கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
ஆனால் கல்லக்குடி போலீசாரின் விசாரணையும், நடவடிக்கையும் திருப்திகரமாக இல்லாததால் கடந்த 23 ஆம் தேதியில் இருந்து 27 ம் தேதி தேதி வரை உடலை வாங்க மறுத்து வந்தனர். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உயிரிழந்த முருகேசனின் மனைவி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் அவரது உறவினர்கள் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.தோட்டத்தின் உரிமையாளர் செந்தில் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லால்குடி அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
அப்போது கல்லக்குடி போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும் எனவும் உறுதி கூறியதன் அடிப்படையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர் .
இதனையடுத்து உயிரிழந்த முருகேசனின் பிரேத பரிசோதனை நடைபெற்று அவரது உடலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.