என்.ஐ.டியில் தேசிய அறிவியல் தினம் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு
திருச்சி, பிப். 29 தேசிய அறிவியல் தினம் 2024 முன்னிட்டு சமவேஷா 2024 : அறிவியலில் புதுமை கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க தூண்டல், கண்டுபிடிப்பாளர்களை ஒருங்கிணைத்தல் என்னும் தலைப்பில் திருச்சி என்.ஐ.டி (தேசிய தொழில் நுட்பக் கழகம்), பெங்களுரிலுள்ள ஐ- ஸ்டெம் (Indian Science, Technology and Engineering facilities)இணைந்து “வளர்ந்து வரும் இந்தியாவிற்கான உள்நாட்டு தொழில் நுட்ப ஊக்குவிப்பை முன்னிலைப்படுத்தி ஒரு நாள் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகவும், ஐ-ஸ்டெமின் தலைமை செயல் அதிகாரி முனைவர் ஹரிலால் பாஸ்கர் பொது விருந்தினராகவும், தேசிய தொழில் நுட்பக் கழகம் அதிநவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சேவை அமைப்பின் தலைமை அதிகாரி முனைவர் எம்.உமாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். முனைவர் மயில்சாமி அண்ணாதுரை தன்னுடைய துவக்க உரையில் வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியா தன்னுடைய விண்வெளித் திட்டங்களை குறைந்த பொருட் செலவில் பல சாதனைகளை படைத்துள்ளது. நிலவில் இந்தியா சோதனைக் கூடம் ஒன்றையும் அமைக்க உள்ளது என்று கூறினார். மேலும், சந்திராயன் திட்டங்களில் குறிப்பாக நிலவில் உள்ள மண் பற்றிய ஆராய்ச்சி தேசிய தொழில் நுட்பக் கழகம், திருச்சி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு சந்திராயன் திட்டம் மற்றும் ஏனைய திட்டங்களின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக இருந்தது என்று பாராட்டினார்.
மேலும் அவருடைய சுகாதாரம், மருத்துவம், விவசாயம் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் கல்வி நிறுவனங்கள், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களின் கூட்டு ஆராய்ச்சியின் தேவைகளை எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் லேப்2மார்கெட்டின் நிறுவனரும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியருமான முனைவர் சுதிர் கே.சின்ஹா பேசுகையில், ரயில்வே துறையில் ஆராய்ச்சி தீர்வுகளை கண்ணுக்குத் தெரியக் கூடிய கொண்டு வந்ததில் கடினமான அனுபவங்களை ஆராய்ச்சியாளர்களிடம் எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் குழு உரையாடலில் பி.வி.கண்ணன், முனைவர் சிறீமதி கேசன், முனைவர் பாலாஜி, முனைவர் சுதிர் கே.சின்ஹா, முனைவர் கே.முத்துக்குமார் கலந்து கொண்டு கருத்தரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர் மற்றும் ஆராயச்சியாளர்களர்களுக்கு தேவையான முக்கிய விஷயங்களான சந்தைப்படுத்துதல், காப்புரிமை, சந்தை நிலவரம் மற்றும் தேவையான இலாபம் பற்றி விளக்கமாக கூறினர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு முனைவர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவரின் அனுபவம், ஆலோசனைகள், தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆராய்ச்சியாளர்களின் பங்கு பற்றிய விளக்கங்கள் ‘உள்நாட்டு தொழில் நுட்ப கண்டுபிடிப்பு’ முயற்சிகளை தூண்டும் விதமாகவும் பல்வேறு சந்தேகங்களுக்கான விளக்கமாகவும் அமைந்தது.