ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில்  புதிய கட்டிடங்கள்:  முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

0 149
Stalin trichy visit

திருச்சி, அக்.6 திருச்சி மாவட்டத்தில் 2024 – 25 ஆம் ஆண்டு நிதியாண்டின் கீழ் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்காக காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சோழமாதேவி ஊராட்சியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த 2023 – 24 ஆம் நிதி ஆண்டின் கீழ் தமிழ்நாடு அரசு இரண்டு பள்ளிகளில் வகுப்பறைகள் 6 கணினி ஆய்வகம் 2, அறிவியல் ஆய்வகம் 1, பொருட்கள் பாதுகாப்பு அறை 1 என மொத்தம் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை இன்று காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்த கட்டிடங்களை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் பாதுகாப்பு அறைகள் அனைத்தையும் ஆய்வு செய்து ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

பள்ளி மாணவர்கள் பாடங்களை கவனிப்பதற்கு ஏதுவாக புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளில் கரும்பலகைக்கு பதிலாக செராமிக் கிரீன் போர்டு அமைக்கப்பட்டுள்ளது இதே போல் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக்கு வெளியே தகவல் பலகை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன், திருச்சி மாவட்ட செயற்பொறியாளர் தாட்கோ நவநீதகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவா, திருவெறும்பூர் வட்டாட்சியர் தனலெட்சுமி , திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த் மற்றும் அண்ணாதுரை, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், பகுதி செயலாளர் நீலமேகம், மாமன்ற உறுப்பினர் தாஜுதீன், காட்டூர் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி மற்றும் சோழமாதேவி ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தகுமாரி உட்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.