கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: அமைச்சர் பெரியகருப்பன் திடீர் ஆய்வு
திருச்சி, அக்.6 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொன்னம்பட்டி பேரூராட்சியில் உள்ள மலம்பட்டியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் ரூ 6 கோடி 53 லட்சம் செலவில் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக தமிழக முதல்வரால் கடந்த மே மாதம் 9ம் தேதி காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டது. அதை தொடர்ந்து அதற்கான கட்டுமானப் பணிகள் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.
துவரங்குறிச்சியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பம்பிங்க் முறையில் குழாய்கள் வழியாக கொண்டுவரப்பட்டு அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இப்பகுதியில் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைவதற்கு அருகில் உள்ள உடையாம்பட்டி, பொன்னம்பட்டி, கோணம்பட்டி, மலம்பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுத்திகரிப்பு நிலையத்தின் அருகில் உள்ள சில கிராமங்கள் சிவகங்கை மாவட்டம் என்பதால் அம்மாவட்ட மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடையாம்பட்டி, மலம்பட்டி, பொன்னம்பட்டி மற்றும் கோணம்பட்டி பகுதியில் பல நூறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலக்கழிவுகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதால் சுற்றுசூழல் மாசுபடுவதோடு, பல நூறு குடும்பத்தினர் நல்ல காற்றை சுவாசிக்க முடியாத சூழல் ஏற்படும்.
மேலும், மலக்கழிவுகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் நிலத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதோடு நிலத்தடி நீரும் மாசுபடுகின்ற அபாயம் உள்ளது. இப்பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதரமாக திகழும் கால்நடை வளர்ப்பும் பாதிக்கபடும். சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் நிலத்திற்கு அருகில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியும் செயல்பட்டு வரும் நிலையில் சுத்திகரிப்பு நிலையம் மூலம் பலவிதமான நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இத்திட்டமானது துவரங்குறிச்சி நகரப் பகுதிக்கு வெளியே, தற்பொழுது கழிவுநீர் சேகரிக்கும் பகுதியிலேயே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து இப்பகுதி மக்களின் வாழ்வதாரத்தை காக்கவும், இயற்கையான சுற்றுசூழலை காக்கவும், விவசாய பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருச்சி மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் திட்டத்திற்கு அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து இரண்டு நாட்களுக்குமுன்பு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.
இந்நிலையில் நேற்று அமைச்சர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக பணிகள் நடைபெறும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சரிடம் பொதுமக்கள் இத்திட்டத்தை செயல்படுதினால் தங்கள் பகுதி நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு விவசாயமும் கால்நடைகளும் முற்றிலும் பாதிக்கப்படும் என குற்றஞ்சாட்டினர்.
பின்னர் பொன்னம்பட்டி பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் மருங்காபுரி வட்டாட்சியரிடம் திட்டம் குறித்து ஆலோசனை நடத்திய பின் அமைச்சர் விவசாயிகளையும், கால்நடைகளையும், மக்களையும் பாதிக்காதவாறு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.