ஆன்லைன் கல்வி ரேடியோ – முதன்முறையாக திருச்சியில் அசத்தும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி!

0 612
Stalin trichy visit

அரசு சம்பளம் வாங்கினால் போதும் என நினைக்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில் பலர் அயராது மாணவர்களுக்கு கல்வியை எப்படியாவது இந்த இக்கட்டான காலகட்டத்திலும் சேர்க்க வேண்டுமென அரும்பாடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் ஒருபுறம் கல்வி தொலைக்காட்சி மற்றும் பல்வேறு வகையில் கல்வியை போதித்தாலும் ஆசிரியர்களும் ஒரு பக்கம் துணை புரிந்து நிற்கின்றனர்!


வீடே பள்ளிக்கூடமாய், தொலைக்காட்சியை வகுப்பறையாய், கல்வி சேனல் ஆசிரியராக மாறிவிட்ட காலகட்டம் இது! கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் எதுவும் செயல்படாத நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து ஆன்லைன் முறையிலும் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் பாடத்தினை கற்று வருகின்றனர்.

ஆம், கல்வி தொலைக்காட்சி போலவே “ஆன்லைன் கல்வி ரேடியோவை” உருவாக்கி கிட்டத்தட்ட தமிழகத்தின் 20 மாவட்டங்களில் 2 இலட்சம் மாணவர்களுக்கு கல்வி எனும் விதையை விதைத்துள்ளார் இந்த அரசு பள்ளி ஆசிரியர்கள்! அதுவும் பட்டன் மொபைலிலும் இயங்கும் ஆன்லைன் கல்வி ரேடியோவை உருவாக்கி கிராமப்புற மாணவர்களும் பயன்பெற்று வருகின்றனர்.


அந்த வகையில் திருச்சி பீமநகர் பகுதியில் அமைந்திருக்கும் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி பல்வேறு செயல்பாடுகளுடன் மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் அசத்தி வருகின்றனர்.
மாநகராட்சி மூலம் 77 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு தொடர்ந்து அங்கு உள்ள ஆசிரியர்களின் பணிகளால் மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருதையும், தற்போது இந்த (2021 -2022) கல்வியாண்டில் 496 மாணவர்கள் புதிதாக சேர்க்கையும் அதிகரித்துள்ளது. தற்போது ஆன்லைன் முறையில் கல்வி பயில்வதால் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் ஆன்லைன் கல்வி ரேடியோவை தங்களது பள்ளிக்கு என பிரத்தியேகமாக உருவாக்கி தினந்தோறும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பீமா நகர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ ராஜேஸ்வரி பேசினோம்….”எங்கள் பள்ளியில் மாநகராட்சியின் ஒத்துழைப்பால் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது. தற்போது இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி நாங்கள் கல்வி தொலைக்காட்சி பார்க்க பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் உருவாக்கிய ஆன்லைன் கல்வி ரேடியோவில் அறிவியல் பாடத்தை எடுத்து வந்தேன். இதனையே நாம் பள்ளிக்கு செய்யக் கூடாது என நினைத்து பிரத்தியேகமாக எங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து தன்னிச்சையாக தற்போது ஆன்லைன் கல்வி ரேடியோவில் பயின்று வருகின்றனர்.


எங்கள் பள்ளிக்கென தனியாக வலையொளி (Youtube Channel), வலைப்பூ( Blogger), அனைத்து வகுப்புகளுக்கான Whatsapp குழுக்கள், ஆளுமைத்திறன் மேம்பாட்டிற்கான Whatsapp குழுக்கள், google meet மூலம் இணைய வகுப்புகள் என கொரனா பெருந்தொற்று காலத்திலும் குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தி , குழந்தைகளோடு தொடர்ந்து இணைந்து பயணித்து வருகிறோம்.

பள்ளியில் புதிதாக சேர்க்கை விகிதம் அதிகரித்துக் கொண்டே வருவதால் மாணவர்களின் கற்றல் மற்றும் நற்சிந்தனைகளை மேம்படுத்த புதிய பரிமாணத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். பள்ளிக்கென தனியாக ஆன்லைன் கல்வி ரேடியோ எஃப்.எம் துவங்கப்பட்டு , பெற்றோர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.

இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குரல்களில் பாடக்கருத்துகள், வினாடி வினா, நன்னெறிக்கதைகள், புத்தகப்பூங்கொத்து கதைகள் என பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. மாணவரின் கேட்டல் திறன் மூலம் கற்றலை மேம்படுத்தும் புதிய பரிமாணம் துவங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ என்றால் என்ன? இதுகுறித்து ஏற்கனவே அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியவை இவை!

“பொதுவாக ரேடியோ என்பது செவிக்கு விருந்து அளிப்பவை. இன்றைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்ட் மொபைல் வாங்க முடியாமல் கூட எத்தனையோ பெற்றோர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வருகின்றனர். அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் பட்டன் மொபைலில் கூட இயங்கும் ஆன்லைன் ரேடியோவை உருவாக்கியுள்ளோம். ஆண்ட்ராய்டு மொபைல்களில் குழந்தைகள் கையில் கொடுக்கும்போது தேவையில்லாத இணையதளம் மற்ற பக்கங்களுக்கும், விளையாடுவதற்கும் மாணவர்கள் செலவழிக்கின்றனர். ஆனால் ரேடியோ அப்படியல்ல செவிகளில் கேட்க மட்டுமே முடியும் என்பதால் பாடத்தினை எளிதாக கற்க முடியும் என்பது இதனுடைய கூடுதல் சிறப்பாக அமைகிறது.

தற்போதுள்ள ஊரடங்கு நேரங்களிலும், இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் கற்றல் தடைப்படாத வண்ணம், அவர்கள் வீட்டிலிருந்தபடியே இந்த ஆன்லைன் கல்வி ரேடியோவை பயன்படுத்தி மிக எளிய முறையில் தங்களின் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். தன்னார்வ மிக்க அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, இந்த ஆன்லைன் ரேடியோவை தமிழகம் முழுவதும் இருபதிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

1 – 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்பகுதிகள் & ஆர்வமூட்டும் அறிவுசார் வளர்ச்சி பகுதிகள், உடல் நலம் & மன நலம் மாணவர்களுக்கு பேச்சுத்திறன் என அனைத்தையும் ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் செய்து வருகின்றனர். இது சாதாரண Browser உள்ள பட்டன் மொபைலே போதுமானது, ஸ்மார்ட்போன் தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை.
குறிப்பாக 2G நெட்வொர்க்லேயே சிறப்பாக இயங்கும் தன்மையுடையதால் மலை கிராமங்களிலும் இயங்க ஏதுவாக இயங்கி வருகிறது. மாணவர்கள் எளிதாக , குழப்பமின்றி இயக்கலாம் , தனியே பதிவிறக்கம் செய்ய தேவையில்லை, ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே இதற்காக ஆடியோ தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு கால நேர அட்டவணை பின்பற்றப்படுவதால் மாணவர்கள் திட்டமிட்டு கற்கின்றனர். இதில் பிளேலிஸ்ட் வசதி இருப்பதால் மாணவர்கள் மீண்டும் மீண்டும் தேவையானவற்றை கேட்பதற்கும் வசதி உள்ளது. மெல்ல மலரும் மாணவர்கள் பாடப் பகுதிகளை பல முறைக்கேட்டு கருத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது. மாணவர்களும் தன்னார்வமாக பங்கேற்கின்றனர் , இதற்கான ஊக்கமும் , பாராட்டும் பெறுகின்றனர். பள்ளி தொடங்கிய பின்னும் மாணவர்களும் , ஆசிரியர்களும் தங்களின் கற்றல் & கற்பித்தல் செயல்பாடுகளில் துணைக்கொள்ளும் வகையில் இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ உள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.

https://anchor.fm/corporation-middle-school–beemanagar-trichy/episodes/–1-e1537gl

https://open.spotify.com/show/003fsHD0LxlEk4b0gIUq6r

ஆன்லைன் கல்வி ரேடியோவை தான் தற்போது பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளையும் பெற்றோர்களையும் ஆசிரியரின் ஒன்றிணைத்து செயல்பட்டு அசத்தி வருகின்றனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.