ஒன்றிய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு : கே.என்.நேரு கருப்பு சட்டை அணிந்து வாக்கு சேகரிப்பு
திருச்சி, ஏப்.16 ஒன்றிய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மசோதாவை எதிர்த்து கே.என்.நேரு கருப்பு சட்டை அணிந்து வாக்கு சேகரித்தார்.
தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கும் விதமாக இன்று தமிழ்நாடு முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்திருந்தார். அதன்படி பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். திமுக கூட்டணி கட்சிகள் கருப்பு கொடி போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இன்று காலை தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாமக்கல்லில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருப்பு கொடி ஏற்றி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மேலும் தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து எதிர்ப்பை பதிவு செய்தார். தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கருப்பு கொடி ஏற்றி தி.மு.க. கூட்டணி கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதன் பகுதியாக இன்று காலை காலை 7.30 மணி திருச்சி மாநகராட்சி 62 ஆவது வார்டு பஞ்சப்பூர் செங்குறிச்சி செட்டியபட்டி ராமச்சந்திராநகர், கே,ஆர்,எஸ்.நகர், சீனிவாசன்நகர், ஆர்.எம்.எஸ். காலனி, புதுத்தெரு, எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளில் மேற்கு தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான கே.என்.நேரு ஒன்றிய அரசின் தொகுதி மறு சீரமைப்பு கருப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வாக்கு சேகரித்தார்.