திருச்சியில் மின்சார ரயில் சேவை கோரி தொடர்ந்த மனு தள்ளுபடி
திருச்சி ஏப் 23 திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த மாரி என்ற பத்மநாபன்,வியாபாரியான இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.
சென்னையில் குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில் சேவையை பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு, இது அரசின் கொள்கை முடிவுடன் தொடர்புடையது என்பதால், நீதிமன்றம் இதில் தலையிட இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.