ஒன்றிய அரசைக் கண்டித்து ரயில்வே தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம்
திருச்சி, பிப்.16 ஒன்றிய அரசைக் கண்டித்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற் சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் 4000பேர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றம் செய்ததை கண்டித்தும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் 4000பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிலாளர்கள் பேரணியாக வந்து ரயில்வே பணிமனை வாசலில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.