திருச்சி அரியமங்கலத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
திருச்சி, அக்.24 திருச்சி அரியமங்கலத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் : மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை:
திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை காட்டூர் திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலை ஓரங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் அம்மாகுளம் பாரதியார் தெரு பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் சாலைகள் முழுவதும் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில் இது போன்ற பாதிப்புக்கு உள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இனி வரும் காலங்களில் வடிகால் வாய்க்காலை தூர்வாரி மழைநீர் வடிந்து செல்வதற்கு அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பை கிடங்கில் வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் :
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் குப்பை கிடங்கில் வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் :
திருச்சி அரியமங்கலத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பை கிடங்குஉள்ளது.
இங்கு மாநகர் பகுதியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 500 டன் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.
இந்த நிலையில் இன்று மாலை அரியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.
இதனால் அரியமங்கலம் குப்பை கிடங்கில் இருந்து குப்பையுடன் சேர்ந்து துர்நாற்றத்துடன் கூடிய கழிவு நீரானது வெளியேறியது.
இந்த கழிவு நீரானது குப்பை கிடங்கை சுற்றியுள்ள திடீர் நகர், பெரியார் நகர் , அண்ணா நகர், காவேரி நகர், மேல அம்பிகாபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றது.
முறையான வடிகால் வசதி இல்லாததால் தெருவுக்குள் புகுந்த கழிவு நீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் அதிலிருந்து வரும் விஷ ஜந்துக்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மேலும் இந்த கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மாநகராட்சி குப்பை கிடங்கிலிருந்து வரக்கூடிய கழிவு நீரை முறையான வடிகால் வசதி அமைத்து குடியிருப்பு பகுதிகளில் வராமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.