வீரப்பூர் பொன்னர், சங்கர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடக்கம்
மணப்பாறை அருகே புகழ்பெற்ற வீரப்பூர் பொன்னர், சங்கர், பெரியக்காண்டியம்மன் கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவக்கம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள பெரியகாண்டியம்மன், பொன்னர் – சங்கர் கோவில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் அண்ணன்மார் சுவாமிகளான பொன்னர் – சங்கர், தங்காள், மகாமுனி, கருப்பண்ணசாமி உட்பட பல வழிபாட்டு தெய்வங்கள் உள்ளன. பொன்னர் சங்கர் வீர வரலாற்றை திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான முத்தமிழறிஞர் கலைஞரின் கைவண்ணத்தில் வரலாற்றுத் தொடர் கதையாக வார இதழில் வெளிவந்தது. பின்னர் பொன்னர்- சங்கர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கொங்குநாட்டு மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழா புகழ்பெற்றதாகும்.
இக்கோவிலில் கடந்த 2002 ம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது 23 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அரசு கும்பாபிஷேகம் நடத்திட அனுமதி வழங்கியுள்ளது. ரூ.73 லட்சம் மதிப்பில் புதிய ராஜகோபுரம், ரூ. 15 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் மராமத்து பணிகள் மேற்கொள்ளவும் என ரூ.88.25 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி உபயதாரர்களான தொழிலதிபர்கள் நாமக்கல் மாவட்டம், நன்செய்இடையார் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்களான பொன்னர், சங்கர் சகோதரர்கள் புதிய ராஜகோபுரத்தையும், மராமத்து பணிகளை மாராட்சிரெட்டியபட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய விழா கோவிலில் இன்று நடைபெற்றது. விநாயகர் பூஜையுடன் துவங்கி பெரியக்காண்டியம்மன், பொன்னர் – சங்கர், கருப்பண்ணசாமி, கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடும் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து யாகபூஜையும், கோ பூஜையும், மகா பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் கோபுர மாதிரிகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு அபிஷேகமும், தீப ஆராதனையும் காட்டப்பட்டு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பரம்பரை அறங்காவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 23 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேக திருப்பணிகள துவங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.