திருச்சி விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி, ஏப்.30 விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.74.91 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் ஒன்று நேற்று இரவு வந்தது. அப்போது விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர் கள் உடைமைகளை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரை அதிகாரிகள் தீவிர சோதனைக்குட் படுத்தினர். சோதனையில் ரசாயனப் பொருட்கள் கலந்த பசை வடிவிலான தங்கத்தை அவர் தன் அடிவயிற்றுக்குள் வைத்து மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவ சிகிச்சை மூலம் ஒரு கிலோ 39 கிராம் எடை கொண்ட தங்கம் வெளியே எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ. 74.91 லட்சம் ஆகும். தொடர்ந்து சுங்கத்துறையினர், தங்கம் கடத்தி வந்தவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.