ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் பிரத்யேக பாத மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

0 36
Stalin trichy visit

திருச்சி, நவ.16  உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, திருச்சி நாகமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையில், சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக பாத மருத்துவ சிகிச்சைப் பிரிவு (Specialised Foot Clinic) தொடங்கப்பட்டது.

இந்த புதிய சிகிச்சைப் பிரிவை டாக்டர் தங்கபாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் பி. சசிபிரியா முன்னிலை வகித்தார்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு பாதிப்பு மற்றும் கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால், பாதங்களில் உணர்விழப்பு, புண்கள், தொற்றுகள் மற்றும் ஆறாத காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால், சில நேரங்களில் கால் அகற்றும் நிலையும் ஏற்படக்கூடும்.

இதனைத் தடுக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இப்பிரிவில், வருகைதரு சிறப்பு பாத மருத்துவ நிபுணர் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்குப் பிரத்யேக மருத்துவ ஆலோசனைகள், பாதப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், பாதங்களில் ஏற்படும் உணர்விழப்பு, ரத்த ஓட்டக் குறைபாடு, புண்கள் மற்றும் தொற்றுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல், ஆறாத காயங்களுக்கான சிறப்பு சிகிச்சை, கால் அகற்றுவதைத் தடுக்கும் உறுப்பு பாதுகாப்பு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகள் இப்பிரிவில் வழங்கப்பட உள்ளன.

சர்க்கரை நோயாளிகள் தங்களது பாதங்களை முறையாகப் பராமரிப்பதுடன், சிறிய காயம், வீக்கம், நிறமாற்றம், உணர்விழப்பு அல்லது ஆறாத புண்கள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

“கால் பாதிப்புகளைத் தடுப்போம்; கால்களைப் பாதுகாப்போம்!” என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய சிகிச்சைப் பிரிவு, சர்க்கரை நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், தவிர்க்கக்கூடிய கால் அகற்றுதல் மற்றும் உடல் ஊனங்களைத் தடுக்கவும் உதவும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.