அறுவடைக்கு தயாரான நெற்பயிரில் மருந்து தெளிப்பு: விவசாயியின் வாழ்வாதாரத்தை அழித்த மர்மநபர்கள்
திருச்சி, ஜன.20 தொட்டியம் அருகே அறுவடைக்கு தயாரான நெற்பயிரில் மருந்து’ தெளிப்பு – பொறாமையால் விவசாயியின் வாழ்வாதாரத்தை அழித்த மர்ம நபர்கள்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கோடியம்பாளையம் கிராமத்தில், அறுவடைக்கு தயாராக இருந்த ஒன்றரை ஏக்கர் நெற்பயிரை மர்ம நபர்கள் விஷ மருந்து அடித்து அழித்த சம்பவம் விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டியம் தாலுகா, அலகரை ஊராட்சி, கோடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கணபதி. இவருக்கு தொட்டியம் அடுத்த அலகரை கிராமம் அருகிலுள்ள பட்டவர்த்தி பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் ‘அம்மன் பொன்னி’ ரக நெல்லை சாகுபடி செய்திருந்தார். கடந்த நான்கு மாதங்களாக பிள்ளையைப் போலப் பராமரித்து வந்த நெற்பயிர், தற்போது கதிர் பிடித்து இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கணபதியின் வயலுக்கு சென்ற மர்ம நபர்கள், பயிர்களைக் கருகச் செய்யும் ‘எரி மருந்து’ எனப்படும் களைக்கொல்லியை ஸ்பிரேயர் மூலம் தெளித்துள்ளனர். அடுத்த இரண்டு நாட்களில் பச்சை பசேலென இருந்த பயிர்கள் முழுவதும் காயந்து நிறம் மாறிப்போனதைக் கண்டு கணபதி அதிர்ச்சியில் உறைந்தார். சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, விளைச்சல் மூலம் 1.20 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது மொத்த உழைப்பும் வீணாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து விவசாயி கணபதி தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திட்டமிட்டு விவசாயின் வாழ்வாதாரத்தை அழித்த மர்ம நபர்களை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பால் பிடித்து அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிரை விஷம் வைத்துக் கொன்ற கயவர்களின் செயலுக்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.