பாசன மேலாண்மை குறித்து மாநில அளவிலான கருத்தரங்கம்

0 190
Stalin trichy visit
திருச்சி, மார்ச் 24 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு  திருச்சி துவாக்குடி பாசன வேளாண்மை பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்டம் மற்றும் தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து நடத்திய பங்கேற்பு பாசன மேலாண்மை குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு  அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்ட இயக்குநர் தென்காசி சு.ஜவகர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
பாசன மேலாண்மை பயிற்சி நிலைய தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமை இயக்குநர் தயாளகுமார்  தலைமை தாங்கிப் பேசுகையில், உலகின் மொத்தத் தண்ணீர் இருப்பில் 1 சதவீதம் மட்டுமே நாம் பயன்படுத்தக்கூடிய நன்னீர் உள்ளது. எனினும், அதன் முக்கியத்துவத்தை உணராமல் நாம் தண்ணீரை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம் என்று குறிப்பிட்டார். மூன்றாவது உலகப்போர், நிச்சயமாக தண்ணீருக்காகவே நடக்கும் என்பதாக உலக அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.  எனவேநன்னீரைச் சேமித்துப் பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும் என்றார்.
நீர்வளத்துறை முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர் மற்றும் பங்கேற்பு பாசன மேலாண்மை ஆலோசகர்  நாகராஜன்  பங்கேற்பு பாசன மேலாண்மை குறித்து பேசுகையில், புவியியல் மற்றும் பருவநிலை மாற்றங்களால், தமிழ்நாட்டில் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு போதுமான அளவு இருப்பினும், பயன்பாட்டிற்குத் தேவையான நீர், நமக்குத் தட்டுப்பாடாகவே உள்ளது. நிலத்தடியில் 73 சதவீதம் பாறைகளும், 27 சதவீதம் மட்டுமே மணல் உள்ளது. நாம் முழுதாக நிலத்தடி நீரை நம்பியிருக்க முடியாது. வருடந்தோறும், வடகிழக்கு பருவமழை குறுகிய காலத்தில் கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி சேதங்களை ஏற்படுத்துகிறது. எனவே, அத்தகைய இழப்புகளைத் தவிர்ப்பதற்கும், வீணாகக் கடலில் கலக்கும் நீரைச் சேமிப்பதற்கும் நீர் மேலாண்மைக்குரிய செயல்திட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம். அதோடு  மக்கள் தொகை அதிகரிப்பு, மாசுபாடு, தொழிற்துறை வளர்ச்சி போன்றவற்றாலும் நீர்த்தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் புவியியல் நிலவரத்தின்படி, நீர்ப் பற்றாக்குறையை நிர்வகிக்க கூடுதல் நீர்வள ஆதார அமைப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. நீர் சேமிப்புக்குரிய மாற்றுவழியை உருவாக்குவதே இதற்குத் தீர்வாகும். அந்த வகையில், நீர் மேலாண்மையில் “பங்கேற்பு பாசன மேலாண்மை முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டில்  95 சதவீத மேற்பரப்பு நீரும் 81 சதவீத நிலத்தடி நீரும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருப்பதால், நீர் மேலாண்மையில் அனைத்து தரப்பினரும் அக்கறையுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே திறன்மிக்க மற்றும் பயனுள்ள நீர் மேலாண்மையைச் சாத்தியமாக்க முடியும்  என்று கூறினார்.  தொடர்ந்து, தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்ட நீர்வள மேலாண்மை நிபுணர் முனைவர் ஆர்.கிருஷ்ணன் அவர்கள், “தமிழ்நாடு விவசாயிகள் பாசன அமைப்புகள் மேலாண்மைச் சட்டம், 2000 என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டில், உலக வங்கி நிதியுதவியுடன் 5000-க்கும் மேற்பட்ட நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்கள்(கீஹிகி) உருவாக்கப்பட்டுள்ளது என்றார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசுகையில், பண்டைய தமிழ் மன்னர்கள் நீர் மேலாண்மையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதைப் பாராட்டினார். அதேசமயம், நிகழ்காலத்திற்கேற்ற புதிய தொழில்நுட்பங்களை பாசன மேலாண்மையில் நாம் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டார். செயற்கை உரமில்லா இயற்கை வேளாண்மை இயக்கத்தின் முன்னோடி நம்மாழ்வாரின் சேவைகள் குறித்தும் பாராட்ட வேண்டும். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இக்கருத்தரங்கின் வாயிலாக, நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தினர், நீர் சேமிப்பில் அனைவரும் பங்காற்ற உறுதியேற்குமாறும் கேட்டுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வேளாண் வணிக நிபுணரும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்டத்தின் உலக வங்கி பணிக்குழுத் தலைவருமான பார்பாடு யூசுபி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்ட இயக்குநருமான சு.ஜவகர் ஆகியோர் உரையாற்றினர். மாநில அளவிலான கருத்தரங்கில், நீர்வளத்துறையின் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு மண்டலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர்களும், பிரதிநிதிகளும், விவசாயிகளும், 50க்கும் மேற்பட்ட நீர்வளத்துறை பொறியாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். கருத்தரங்கின் ஒரு பகுதியாக, நீர்வளத்துறை மண்டலங்களின் சார்பிலும், வேளாண் வணிகத்துறை சார்பிலும் காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தன.
முன்னதாக, பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணை இயக்குநர் (பயிற்சி) இலக்குவ பூபதி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்ட கண்காணிப்புப் பொறியாளர் பழனியம்மாள் பாசன மேலாண்மை பயிற்சி நிலைய பேராசிரியர், வேளாண் இணை இயக்குநர் லட்சுமி பிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை, வேளாண்மை துணை இயக்குநரும் பயிற்சி நிலைய இணைப் பேராசிரியரான சி. இராஜேஸ்வரி, நீர்வளத்துறை உதவிப் பொறியாளர்கள் ஜென்சி கிறிஸ்டி, ஹெப்சிபா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணை இயக்குநர் (பயிற்சி) பொறி. இலக்குவ பூபதி  தலைமையில், இணைப் பேராசிரியர்களும் நீர்வளத்துறை செயற்பொறியாளர்களுமான .நா.இரமேஷ், அக்பர் அலி, அருள்குமரன் ஆகியோர் கண்காணிப்பில், பாசன மேலாண்மை பயிற்சி நிலைய உதவிப் பேராசிரியர்கள், இணை ஆராய்ச்சியாளர்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.