மணப்பாறையில் கர்ப்பிணி பெண்ணை கடித்து குதறிய தெருநாய் : நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை
திருச்சி, நவ.1 திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதால் மக்கள் மிகுந்த அச்சந்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாய் தொல்லையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது நாய்கள் துரத்துவதாலும் திடீரென குறுக்கே ஓடுவதாலும் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டும் வந்தது.
இந்நிலையில் இன்று காலை தெற்கு லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த சங்கவி (22) என்ற 7 மாத கர்ப்பிணிய சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த தெருநாய் சங்கவியின் கால் மற்றும் கையை கடித்து குதறியது. இதனால் அவர் சப்தம் போடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சங்கவியை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மணப்பாறை பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் நாய்க்கடிக்கு ஆளாவதும், சாலையின் குறுக்கே செல்லும் நாய்களால் விபத்தை சந்திக்கும் நிகழ்வும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே தான் இருக்கின்றது. ஆககே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.