தமிழக அரசு விருது பெற்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து வழங்கிய பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது – 2024 விருது பெற்ற
திருச்சி மாணவி சுகித்தாவை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் பாராட்டு
திருச்சி, ஜன.15- தமிழக அரசு சார்பில் தேசிய பெண் குழந்தை தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீர தீர செயல் புரிந்த 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு சிறப்பு விருது, பாராட்டு பத்திரம், ரூ.1 லட்சம் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு திருச்சி சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த மோகன் – பிரபா தம்பதியினரின் மகளான செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி சுகித்தாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் இவ்விருதினை வழங்கினார்கள்.
மாணவி சுகித்தா தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது தனது சேமிப்பில் இருந்து சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு உதவிகள் செய்வதுடன், ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு தன்னால் முயன்ற உதவிகளை வழங்கி வருகிறார்.
பெண் குழந்தைகள் கல்வி முக்கியத்துவம் மற்றும் இலவச சிலம்ப பயிற்சி அளித்து வரும் இவர் அரசு பள்ளிகளில், மற்றும் திருச்சி மத்திய சிறை கைதிகளுக்கு அவர்கள் நன்னெறி கடைபிடிக்கவும் நல் ஒழுக்கம் மேம்படவும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வழங்கியும், பாரம்பரிய மற்றும் கிராமப்புற கலைகளை மீட்டெடுக்கும் விதமாகவும் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறார்.
திருச்சியை சேர்ந்த மாணவி முதல் முதலாக பெண்கள் முன்னேற்றத்திற்கான மாநில விருது பெறுவது இதுவே முதல் முறையாகும். விருது பெற்ற மாணவி சுகித்தாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் அவர்கள் சுகித்தாவை அழைத்து பாராட்டினார்கள் உடன் மாவட்ட சமூக நல அலுவலர் எம்.நித்தியா.
இதேபோல் சுகித்தாவின் தந்தை மோகன், உலக சிலம்ப இளையோர் சம்மேளன துணை தலைவர் வரகனேரி ரவிச்சந்திரன் மற்றும் கலைக்காவிரி கல்லூரி பேராசிரியர் சதீஸ்குமார் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.